Tuesday, May 26, 2009

11. செய்நன்றி அறிதல்

11. செய்நன்றி அறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
(101)
விளக்கம்:

தான் எதுவுமே செய்யாதிருக்கவும், பிறன் தனக்குச் செய்த உதவிக்கு, இவ் வுலகமும் வானுலகமும் ஈடாக முடியாது.


காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
(102)
விளக்கம்:

காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறியதே என்றாலும் அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும்.

பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
(103)
விளக்கம்:

பயனைக் கருதாதவர் செய்த உதவியின் நன்மையினை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும்விட அளவினால் மிகப் பெரியதாகும்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்.
(104)
விளக்கம்:

உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்.

உதவி வரைந்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
(105)
விளக்கம்:

உதவியானது அதன் அளவையே எல்லையாக உடையது அன்று: அது உதவி செய்யப்பட்டவரின் பண்பையே தனக்கு அளவாக உடையதாகும்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயர் நட்பு.
(106)
விளக்கம்:

மனமாக இல்லாதவரின் நட்பினை ஒரு போதும் மறக்கலாகாது. துன்பக் காலத்தில் உறுதுணையாக உதவியவரின் நட்பையும் விடலாகாது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
(107)
விளக்கம்:

தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழு பிறப்பிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் நன்றியுடையோர்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
(108)
விளக்கம்:

ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது. நன்மை அல்லாத விஷயங்களை அன்றைக்கே மறந்து விடுவது நல்லதாகும்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
(109)
விளக்கம்:

ஒருவர் நம்மைக் கொன்றாற்போன்றதொரு துன்பத்தைச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்தாலும் அத் துன்பம் கெடும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.
(110)
விளக்கம்:

எந்ந நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்: ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.

No comments:

Post a Comment